வாசிப்பை நேசிப்பவர்கள் சமுதாயத்தை நேசிப்பார்கள் - எழுத்தாளர் ஆட்டோ சந்திரகுமார் பேச்சு
அன்னூர்


புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை மற்றும் சிற்பி அமைப்பு சார்பில் அன்னூரில் புத்தக கண்காட்சி தாசபளஞ்சிக பெரிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நேற்று மாலை புத்தக கண்காட்சியின் நிறைவுவிழா நடைபெற்றது. விடியல் அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிற்பி ரங்கநாதன் முன்னிலை வகித்தார். நிறைவு விழாவில் லாக்கப் நாவலாசிரியர் ஆட்டோ மு.சந்திரகுமார் பங்கேற்று பேசும் போது வாசிப்பு என்பது என்ற வாழ்க்கையிலிருந்து முற்றும் வேறான அனுபவ வகையை சார்ந்தது.  வாசிப்பு அடுத்த நடக்கப்போகும் ஏராளமான செயல்களை துவக்கி வைப்பதற்கான ஆரம்பம். 



வாசிப்பு என்பது ஆணோ அல்லது பெண்ணோ இதுவரை அவர்கள் வாழ்ந்திராத இனிமேலும் வாழமுடியாத ஒரு புதிய அனுபவத்தை தரும் விஷயம். எழுத்து என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புத்தகங்களாக கொட்டி கிடக்கிறது. புத்தகங்கள் பல்துறை அனுபவமாக, பல்தேசிய மொழியாக, பல்வேறு நாட்டு மக்களின் கலை, பண்பாட்டு, நாகரிகமாக திகழ்கிறது. வாசிப்பின் மூலமாக மனிதகுலம் கடந்த நூற்றாண்டுகளாக அபிரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. வெறும் தந்தை வழி மகனுக்கான தொழிலாக மட்டுமே மாறிவிடாமல் துறை சார்ந்த வளர்ச்சியை புத்தகங்கள் அடைய காரணம் அச்சு கூடங்கள், படைப்புலகம் மற்றும் வாசகர்கள்.

சிந்தனையாளன் நேரடியாக அனைவரிடம் தனது குமுறல்களை, எண்ணங்களை தெரிவிக்க முடியாது என்பதால் மை வழியாக செல்கிறான். வாசகனை படைப்பாளியாக்கும் படைப்பு தான் சிறந்தது. வாசிப்பின் மூலம் எதார்த்த உலகில் இருந்து கனவுலகிற்கு செல்ல முடிகிறது. இன்றைக்கு வீடுகள் சிறைக்கூடங்கள் ஆகிவிட்டது. இதில் டிவி, மொபைல்போன், சமூக வலைத்தளங்களில் மக்கள் முடங்கி கிடக்கிறார்கள். யார் வாசிப்பை நேசிக்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தை நேசிப்பார்கள். ஒரு  நூறு வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை தரும் புத்தகங்களை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும் என்றார். நிறைவு விழாவில் ஏராளமான வாசகர்கள், மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.